ஞாயிறு, 24 ஜூன், 2012

அவுஸ்திரேலியாவை அடுத்து நெதர்லாந்திலும் அப்பிளுக்கு அடி! _

 செம்சுங் நிறுவனத்திற்கு நட்ட ஈடு செலுத்தும்படி அப்பிள் நிறுவனத்திற்கு நெதர்லாந்து நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

அப்பிள் நிறுவனமானது செம்சுங் நிறுவனத்தின் காப்புரிமையொன்றினை மீறியுள்ளதினாலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்கள் இணையத்துடன் தொடர்புகொள்ளும் முறை தொடர்பான காப்புரிமையே மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எவ்வளவு தொகையினை அப்பிள் செலுத்தவேண்டும் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனாலும் அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ பேட்கள் நெதர்லாந்தில் விற்பனையாகியுள்ள எண்ணிக்கையப் பொறுத்தே நட்ட ஈட்டுத்தொகையும் கணிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தீர்ப்பினை செம்சுங் நிறுவனம் வரவேற்றுள்ளதுடன் தனது தொழில்நுட்ப வசதிகளை அப்பிள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்வதாக செம்சுங் பி.பி.சி ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் பெறுமதிமிக்க நிறுவனமாக அண்மையில் மாறிய அப்பிள் கடந்த சில காலங்களாகவே பல சட்டரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

இதேபோன்ற வேறொரு சட்டச்சிக்கலுக்கும் அப்பிள் அவுஸ்திரேலியாவில் அண்மையில் முகங்கொடுத்தது.

அப்பிள் இறுதியாக வெளியிட்ட 'ஐ பேட்' சாதனங்கள் 4 ஜி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வசதியினைக் கொண்டுள்ளதாக விளம்பரப்படுத்தியது.

எனினும் அச்சாதனங்கள் மேற்குறிப்பிட்ட வசதியினைக் கொண்டிருக்காமையால் அப்பிள் மீது வழக்குத்தொடுக்கப்பட்டது.

இதன்போது சுமார் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அப்பிள் நட்ட ஈட்டுத் தொகையாக செலுத்தவும், நீதிமன்றக் கட்டணமாக 305,000 அமெரிக்க டொலர்களைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.



ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட் சந்தைகளில் ஜாம்பவான்களாகத் திகழும் செம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக பல சட்டரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

அப்பிள் செம்சுங் மீது வழக்குத்தொடர்வதும், செம்சுங் அப்பிள் மீது வழக்குத்தொடர்வதும் வாடிக்கையாகிவிட்டன.

செம்சுங் தனது சாதனங்களின் வடிவத்தையொத்த சாதனங்களைத் தயாரிப்பதாக அப்பிள் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் வழக்கும் தொடந்துள்ளது.

பல நாடுகளில் இவ்விரு நிறுவனங்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்விரண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அதன் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென அமெரிக்க நீதிமன்றமொன்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

எனினும் இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இத்தகைய வழக்குகளால் நிறுவனங்கள் இரண்டினதுமே வருவாய் பாதிக்கப்படுவதாக சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பூகோளமயமாக்கலில் எந்தவொரு நிறுவனங்களும் இன்னொரு நிறுவனத்தைச் சார்ந்திருப்பதும், அவற்றுடன் சேர்ந்து செய்ற்படுவதும் கட்டாயமாகவுள்ளதை மறுக்கமுடியாது. 
___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக